Pages

சிறப்பு வாய்ந்த கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் திருக்கோயில்

Wednesday, 12 June 2019

கொங்கு மண்டலமாம் – கோவை மாவட்டத்திலுள்ள, கோவில்பாளையம் (கோயம்புத்தூர் – சத்தியமங்கலம் செல்லும் சாலை) என்னும் ஊரில் அமைந்திருக்கும் இத்திருக் கோவிலில் சுயம்புவாக சிவப் பெருமான் எழுந்தருளியுள்ளார். இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து உள்ளது. முன்புறம் மூன்றுநிலை கோபுரமும், இறைவனின் சந்நிதானத்திற்கு முன் நந்தியெம்பெருமான் மரகத நிறத்தில் (பச்சை நிறம்) தரிசனமளிக்கிறார். இதுபோன்ற நந்தி மிகவும் அரிது. மரகத கற்கள் விசேஷ சக்தி பொருந்திய ஒரு தனி வகைப்பட்ட கல்லாகும்.

இக் கோவில் நூறு ஆண்டுகளையும் கடந்து அதன் பழமை மாறாமல் இன்றும் நின்றுக் கொண்டுள்ளது இதன் தனிச் சிறப்புக்களில் ஒன்று. டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காபூர் இரண்டு தடவை தமிழகத்தின் மீது படையெடுத்துவந்து, தமிழகத்தில் இருந்த திருக்கோயில்களைத் தேடித் தேடிச் சென்று சின்னாபின்னப்படுத்தி சூறையாடினான். (அது மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் டில்லிக்குக் கவர்ந்து செல்லப்பட்டு, கற்பழிக்கப்பட்டனர். அங்கு இந்துப் பெண்கள் அனுபவித்த கொடூரங்களைப் பற்றி சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ள பல புத்தகங்கள், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இன்றும் கிடைக்கின்றன.) அவ்வாறு சிதைக்கப்பட்ட கோவில்களுள் இதுவும் ஒன்று. இக் கோவிலை மீண்டும் நிர்மாணம் செய்தப் பெருமை ஸ்ரீ காலகாலேஸ்வரர் நற்பணி மன்றம், சிரவை ஆதீனம் ஸ்ரீ சுந்தர அடிகளார், பேரூர் ஆதீனம் கயிலைமாமுனிவர், திருப்பெருந்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார், ஆகியோரைச் சேரும்.

இக்கோவிலை கொங்கு நாட்டின் திருக்கடையூர் என்று கூறுவர். எம தர்மனுக்கே சாப விமோச்சனம் கொடுத்த இக்கோவிலுக்கு அறுபதாம் கல்யாணம் செய்வதற்கு (திருக்கடையூர் செல்ல முடியாதவர்கள்) இங்கே வந்து செல்வார்கள். இக்கோவிலுள்ள குருபாவான் (ஆலங்குடியிலுள்ள தட்சிணாமூர்த்திக்கு இணையாக) ஆசியாவிலேயே மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி என்றுக் கூறுவார்கள்.

செவி வழிச் செய்தி:

சோழ மன்னர்களில் மிகவும் பிரசித்திபெற்ற கரிகால் சோழன், ஒரு சமயம் எவ்வித காரணமுமில்லாமல் ஓர் இளம் பன்றியைக் கொன்றுவிட்டான். அந்த இளம்பன்றி துடிதுடித்து உயிரிழந்தது. அந்த விநாடியே கரிகால் சோழனை அந்தப் பாவம் பீடித்தது. முகம் பொலிவிழந்தது. இதனால் மனம் வருந்திய கரிகால் சோழன், நாரத மகரிஷியைக் குறித்து கடும் தவமியற்றினான். நாரத மகரிஷி அவனுக்குத் தரிசனமளித்து, உபதேசித்தபடி இத்திருத்தலம் வந்து ஸ்ரீ காலகாலேஸ்வரரைப் பூஜித்து, இளம் பன்றியைக் கொன்ற பாவத்திலிருந்து மீண்டான். மீண்டும் அவன் முகம் மீண்டும் பொலிவுற்றது.

இத்திருக்கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்து மகிழ்ந்தான் கரிகாலன். வில், அம்புடன் கூடிய நஞ்சுண்டேஸ்வர சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, அதன்பிறகு இத்திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தான் கரிகாலன். இந்த சிவலிங்கப் பெருமானை இத்திருத்தலத்தில் நாம் இன்றும் தரிசித்து மகிழ முடிகிறது.

இத்திருக்கோவிலில் அம்பிகை ஸ்ரீ கருணாகரவல்லி!, குரு தட்சிணாமூர்த்தி!, ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள்!, விநாயகப் பெருமான், ஸ்ரீ முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் 12 திருக்கைகளுடன் தரிசனமளிப்பது போன்றவைகள் காணக் காணத் திகட்டாத அற்புத தரிசனமாகும்.

நம்பிக்கை:

இத்திருக்கோவிலில் நாள்பட்ட நோய் தீரவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் சுவாமி அம்பாளுக்கு தேன் மற்றும் சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் செய்கின்றனர். அபிஷேக தேனும், சந்தனமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடுவதன் மூலம் குழந்தை பிறக்கவும், நோய் தீரவும் வழிபிறப்பதாக நம்பிக்கையுள்ளது. திருமணத் தடை விலகவும், விஷக்கடிக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

இக்கோவில் திருஞானசம்பந்தர் வழிபட்ட திருத்தலம்! ஆகும்.

இத்திருக்கோயில் பற்றி ஏராளமான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றிலிருந்து இத்திருக்கோயிலின் புராதனப் பெருமை தெரிய வருகிறது. இவற்றில் சோழர் காலத்து கல்வெட்டுகள் அதிகமாக உள்ளன. ஹோய்சலர் நாட்டினர் கல்வெட்டு ஒன்றும் இங்கு கிடைத்துள்ளது.

திருக்கோயில் பற்றிய மேலும் விவரங்களுக்கு :
அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில்,
கோவில்பாளையம்,
தொலைபேசி எண் : 0422 – 2654546.

 

Most Reading

Archives

Total Pageviews