Pages

வேத வேள்விகளின்(யக்ஞங்கள்) தலைவன் சிவபெருமானே! வேத வேள்விகளில் போற்றப்படுபவர் பரமேஸ்வரனே!

Friday, 7 June 2019

வேதங்கள் பிரதானமாக வலியுறுத்தும் வழிபாட்டு முறையான  யக்ஞங்கள் ( வேள்விகள்) பல்தெய்வ வணக்கத்தைத்தான் போதிக்கின்றது; அதில் ஒரு கடவுள்/ பரம்பொருள் வழிபாடே கிடையாது என்று ஒரு சாரார் கூறிவருகின்றார்கள். வேதம் தீயை  வளர்த்து அதன் மூலம் இந்திரன் முதலிய தேவர்களிற்கு அவிர்பாகம் அளித்து  வணங்கும் மார்க்கத்தை மட்டுமே விதிக்கிறதே தவிர சிவ வழிபாடே  அதில் இல்லை என்பதே இவர்களின் வாதம்.

இவர்கள் கூற்று உண்மைதானா...?? வாருங்கள் ஆராய்ந்து பார்ப்போம்.

ருத்ர பரமேஸ்வரன் தான்  வேள்வி/யக்ஞத்தின் வடிவில் திகழ்கின்றார்; வேள்வியென்பது சிவனின் ஸ்வரூபம் என்று முழங்குகிறது  ரிக் வேதம் - "கத்ருதராய ஸுமகாய" - 4.3.7.
இதை உணர்ந்த அப்பர் பெருமான் “வேதமும் வேள்வியும் ஆயினார்”( 6.89 ) என்று ஈசனைப் பாடுகின்றார். வேள்விகளின் மூலம் பூஜிக்கப்படுபவர் சிவபிரானே என்று, சாயனரும் இந்த மந்திரத்திற்கு இட்ட பாஷ்யத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளார் - "ஸுமகாய ஸுயக்ஞயா ஸுபூஜநீயாய."

ரிக் வேதம் யக்ஞங்களுக்கெல்லாம் பதி                (வேள்விகளுக்கு தலைவன்) யார் என்பதனை தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றது:

காதபதிம் மேதபதிம் ருத்ரம் ஜலாஷபேஷஜம் –
பாட்டுத்தலைவனும் வேள்வித்தலைவனுமான ருத்ரன் - I.43.4.

வேள்விகளின் தலைவனாக மட்டும் இல்லாமல், அந்த வேள்விகளைக் காப்பவன் ருத்ரனே(யக்ஞபாலகம்) என்பதை “மேதபதி” என்ற திருநாமம் குறிக்கின்றதென்று சாயனர் தமது பாஷ்யத்தில் நிலைநாட்டியுள்ளார். "காதபதிம்" என்ற திருநாமம், ருத்ரனே யக்ஞங்களில் கூறப்படும்  ஸ்துதிகளான மந்த்ரங்களைக் காப்பவன்(ஸ்துதிபாலகம்) என்பதை உணர்த்துகிறது என்றும் சாயனர் கூறுகின்றார்.

யக்ஞங்களை கெடுப்பவர்களையும்  அழிப்பவர்களையும் அழித்து வேள்விகளை ரக்ஷிப்பவர் ருத்ரரே என்று அதர்வண வேதம் (11.2.23)குறிப்பிடுகிறது:
"யோ’ந்திஷ்டதி  விஷ்டபிதோ யஜ்வன: ப்ரம்ருநன் தேவபியூன்| தஸ்மை நம தஸபி: ஸக்வரீபி:|"

யக்ஞங்களை முடித்துவைப்பவன்  அதாவது வேள்விகளைப் பூர்த்தியாக்கி  முழுமையடையச்செய்பவன்
பரமேஸ்வரன் என்கிறது ரிக் வேதம்:

த்வேஷம் வயம் ருத்ரம் யக்ஞசாதம் வங்கும் கவிமவசே நிஹ்வயாமஹே / 1.114.4

ஒளிர்கின்றவனும்,வேள்வியை முடிக்கின்றவனும் வளைந்த போக்கையுடையவனும் பேரறிவையுடையவனுமாகிய ருத்ரனை நாங்கள் இனிது அழைக்கின்றோம்.

ருத்ரம் யக்ஞானாம்சாததிஷ்டிமபசாம் / 3.2.5

யஜுர்வேத தைத்திரீய சம்ஹிதை ருத்ரனே அனைத்து வேள்விகளுக்கும் அரசன் என்று போற்றுகின்றது:

ஆவோராஜாநாம் அத்வரஸ்ய ருத்ரம்- 1.3.14

வேதம், வேள்வியென்ற பெயரில் தீயை வழிபடும் முறையைத் தான் விதித்துள்ளது என்ற கூற்றும் நிலவிவருகிறது. இது மிகவும் தவறான புரிதல். யக்ஞம் என்பது வெறும் பௌதிகாக்னியை பூஜிக்கும் சடங்கு அல்ல. யக்ஞங்களில் பூஜிக்கப்படும் அக்கினி யாரென்பதை வேதம் பலவிடங்களில் தெளிவுப்படுத்தியுள்ளது:

#ருத்ரனே இந்த #அக்னி

-ருத்ர வா எஷ யத் அக்னி
- எஷ ருத்ர யத் அக்நிஹி

-2வது காண்டம்,6வது ப்ரச்னம்,6வது அணுவாகம் 32 -33

எஷ ருத்ர: யத் அக்னிஹி
ருத்ரனே இந்த அக்னி
- 1வது அஷ்டகம் ௧  வது  ப்ரஸ்னம் 5வது அணுவாகம் 43வது தசினி

இதை திருமூலர், “ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை” என்று குறிப்பிடுகிறார்.

வேதம் 21 விதமான யக்ஞங்களை விதிக்கின்றது. இதைப் பொதுவாக  மூன்று குழுக்களாக பிரிக்கலாம்:

1. பாக யக்ஞங்கள் - 7 - பாகம் அதாவது சமைக்கப்பட்ட த்ரவ்யங்களைக் கொண்டு ஔபாசன  அக்நியில் செய்யப்படும் வேள்விகள்.

2. ஹவிர் யக்ஞங்கள்- 7 -நெய்,பால்,அரிசி,யவை
போன்ற த்ரவ்யங்களைக் கொண்டு ஸ்ரௌதாக்நியில் செய்யப்படும் வேள்விகள்.

3. சோம யக்ஞங்கள்- 7 - சோமக்கொடியிலிருந்து பெறப்படும் சோமரஸத்தைப் பிரதான த்ரவ்யமாகக் கொண்டு இயற்றப்படும் வேள்விகள்.

இனி வேதங்கள் எவ்வாறெல்லாம்  பரமேஸ்வரனிற்கு யாகங்களில் முதன்மை மற்றும் தலைமை ஸ்தானத்தையளித்துப் பூஜிக்க சொல்கின்றது என்பதைப் பார்ப்போம்.

அனைத்து வைதீகக் கர்மாக்களின் துவக்கத்திலும் ஜபிக்கப்படும் ப்ரபத மந்த்ரம் சாம வேதத்தில் உள்ளது:

"மஹந்தம் விரூபாக்ஷம் த்வாம் ஆத்மனா ப்ரபத்யே"
முக்கண்களையுடைய பெருமானே! உம்மை சரணடைகின்றேன்.

"த்வயா ப்ரஸூத: இதம் கர்ம கரிஷ்யாமி "
உம்முடைய உத்தரவின்பேரில் இந்தக் கர்மாவைச் செய்யப் போகின்றேன்.

"தன்மே ஸம்ருத்யதாம்"
அந்தக் கார்யம் நன்கு நிறைவேறி, பயன் தரட்டும்

"தன்ம உபபத்யதாம்"
அது எனக்கு உகந்ததாக, அனுகூலமாக ஆகட்டும்

இவ்வாறு  ஒவ்வொரு சடங்கின் ஆரம்பத்திலும் முக்கண்களையுடைய பரமேஸ்வரனை சரணடைந்து, அந்தக் கர்மாவைச் செய்வதற்கு அவரின் அனுமதியை வேண்டி,
அது  நல்லபடியாக நடக்க வேண்டுமென்று பிரார்த்திக்கப் பணிக்கின்றது ஸாம வேதம்.

யாகத்திற்கு ஸோமக்கொடியைப் பிழிந்து  ஸோமரஸத்தை எடுக்கும்போது உச்சரிக்க வேண்டிய மந்த்ரம் கீழ்வருமாறு:

அயம் ஸோமம் கபர்தினே, க்ருதம் ந பவதே மது

இதில் ஸோமரஸம் கபர்தி(சடைமுடியான ஜடாமகுடத்தோடு கூடியவர்) என்ற பரமசிவனின் பொருட்டு பிழியப்படுகிறதென்று தெளிவாகக் கூறுகின்றது.

வேள்விக்குரித்தான யக்ஞபசுவை யூபஸ்தம்பத்தில் கட்டும்போது சொல்லப்படும் மந்த்ரம் கீழ்வருமாறு:

இமம் பசும் பசுபதே தே அத்ய பத்னாமி அக்னே ஸுக்ருதஸ்ய மத்யே |
   அனுமந்யஸ்வஸுயஜா யஜாம ஜுஷ்டம் தேவானாமிதம் அஸ்து ஹவ்யம் ||

“சகல ஜீவர்களின் பதியான ருத்ரரே! இந்தப் பசு உம் பொருட்டு யூபஸ்தம்பத்தில் கட்டப்படுகின்றது. தேவர்கள் உமக்கு சொந்தமான இந்தப் பாகத்தைச் சேவிக்க உத்தரவு தந்தருளவேண்டும்" என்பதே இதன் தாத்பர்யம்.

யக்ஞ பசு மற்றும் பிற யாக ஹவிஸ்ஸுகளான ஸோமரஸம், பால், தயிர், நெய் போன்றவைகளும் மற்றும் அனைத்தும் பரமேஸ்வரனிற்குத் தான் சொந்தம் என்பதும், அவரிற்கு முதலில் அர்ப்பணிக்கப்பட்டு, அவரின் உத்தரவின் பெயரில் இவைகள் சிவப்ரசாதமாக இந்திராதி தேவர்களிற்கு ஹவிர்பாக ரூபத்தில் வேள்வியில் வழங்கப்படுகிறது என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது.

ரிக் வேதம்(4.3.7)ருத்ர பரமேஸ்வரனை “ஹவிர்தா” ”அதாவது
அனைத்து தேவர்களிற்கும் யாகங்களில் அவரவர்க்குரிய ஹவிர்பாகங்களை அளிப்பவர் என்று போற்றுகின்றது. அதாவது, அக்கினியின் வடிவிலிருந்து தேவர்களுக்கு ஹவிர்பாகங்களை வழங்குபவர் ருத்ரரே என்று விளக்குகின்றார் சாயனர் - "ஹவிர்தே அக்நிரூபேண  தேவானாம் ஹவிர்தாத்ரே / யத்வா ஸ்விஷ்டக்ருத்த்வாத்  ஹவிஷோ தாத்ரே ருத்ராய."

வேள்விகளின் துவக்கத்தில் பரமேஸ்வரன் எவ்வாறு பூஜிக்கப்படுகின்றான் என்பதையும், யாக ஹவிஸ்(வேள்வியில்  இடப்படும் த்ரவ்யங்கள்) தயாரிக்கப்படும் சமயத்தில் ருத்ரனுக்கே சொந்தமானது என்பதனையும் பார்த்தோம். இனி யாகத்தின் போதும் எவ்வாறு பரமேஸ்வரனே பூஜிக்க படுகிறார் என்பதனை பார்ப்போம்.

யஜுர்வேதத்தின் சதருத்ரீயம் சிவபெருமான் அனைத்து  தேவர்களின் இதயத்திலும் அந்தர்யாமியாக விளங்குகிறார்(யோ தேவனாகும் ஹ்ருதயேப்யோ) என்று போற்றுகின்றதாதலால் ஒவ்வொரு தேவதைக்கும் யக்ஞங்களில் அளிக்கப்படும் அவிர்பாகமும் வாஸ்தவத்தில் அவர்களிற்குள் அந்தர்யாமியாக விளங்கும் ஈசனையே சாரும்.

கூர்ம புராணத்தில்  ஈஸ்வரனே கூறுகிறார்:

அஹம் ஹி ஸர்வ ஹவிஷாம் போக்தா சைவ பலப்ரத:|
சர்வதேவதானுர்பூத்வ சர்வாத்மா சர்வசம்ஸ்திதா||

நானே அனைத்து தேவர்களின் வடிவங்களையும்  தாங்கி, யாகங்களில் அளிக்கப்படும் எல்லா அவிர்பாகங்களை ஏற்கின்றேன்.

சிற்றரசர்கள், பிரஜைகள் தங்களுக்குச் செலுத்தும் வரியிலிருந்து ஒரு பங்கை அரசனுக்குக் கப்பம் செலுத்துவது 
போல், எந்தவொரு தேவதைக்கும் யக்ஞங்களில் அவிர்பாகம் அளிக்கப்படும்போது, அந்த அவிர்பாகத்தில் ஒரு பங்கை "அக்நி ஸ்விஷ்டக்ருத்" வடிவில் திகழும் ருத்ரனிற்கு அந்த தேவதையே அளிக்கின்றது என்று யஜுர் வேதத்தின் தைத்திரீய சம்ஹிதை கூறுகின்றது:

தே’ப்ருவன் ஸ்விஷ்டம் வை ந இதம் பவிஷ்யதி யத் ய இமம் ராதயிஷ்யாம இதி | தத் ஸ்விஷ்டக்ருத ஸ்விஷ்டக்ருத்த்வம் ||2.6.8.3

“ருத்ரரைப் ப்ரீதிசெய்தால் நமது வேள்வி நன்கு-வேட்பிக்கப்பட்டதாக (ஸ்விஷ்டக்ருத்) ஆகும்”,என்று தேவர்கள் கூறினார்கள்.

தே’த்வர்யும் அப்ருவந் யதாபூர்வம் ஹவிம்ஷி அபிகாரய | எகஸ்மை அவதானாய புனர் ஆப்யாய | அயதாயாமநி குரு தத ஏகைகம் அவதானம் அவத்ய இதி |

தேவர்கள் யக்ஞத்தை நடத்தும் அத்வர்யுவிடம், ”அவிர்பாகங்களை நெய்யால் அபிகாரம் செய்து அதில் ஒரு பாகத்தை (ருத்ரனுக்காக) பிரித்து எடுக்கவும்,” என்று உத்தரவிட்டார்கள்.

இறுதியாக, யாகம் முடிந்தபின் யாகபூமியில் தேவர்கள் மற்றும் ரிதிவிக்குகள் அனுபவித்து மீதமாக இருக்கக்கூடிய ஹவிஸ் முதலிய அனைத்தும்(உச்செஸானபாகம்) பரமேஸ்வரனுக்குத் தான் சொந்தம். மீதமாக இருக்கக்கூடிய இதில் மிக சூக்ஷ்மமான தத்வம் உள்ளது.
அதர்வண வேதம்(11.7.6), ஒரு தாயினுள் எவ்வாறு கர்ப்பம் அடங்கியுள்ளதோ அதேபோல்
யாகத்தின் சிஷ்ட பாகத்தில்
யாகத்தின் அனைத்து உறுப்புகளும், ராஜஸூயம், வாஜபேயம், அக்நிஷ்டோமம் அஸ்வமேதம் முதலிய யாகங்களும், அக்கினியில் அளிக்கப்படும் ஹவிஸ்ஸுகளும், யாகத்தில் வழங்கப்படும் தானங்களும், வஷட்காரம், யாக தீக்ஷையென இவையனைத்தும் அடக்கம்.

வைஷ்ணவ புராணமான வராஹ புராணம் பரமசிவனை “யக்ஞமூர்த்தே நமோ நம:”(யக்ஞங்களின் தெய்வம்) என்று துதிக்கிறது.

வேத வேள்விகளின் தலைவன் பரமேஸ்வரனே என்று தமிழ் வேதங்கங்களும் முழங்குகின்றன:

வேதமாய் வேள்வியாகி...நின்றபெம்மான்
- சம்பந்தர்  தேவாரம்,மூன்றாம்  திருமுறை 

வேதத்தான் என்பர் வேள்வியுளானென்பர்
-அப்பர்   தேவாரம், ஐந்தாம்  திருமுறை 

எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்
அரிய யற்கரி யானை யயர்த்துபோய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே.

வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள் ; அவ்வக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய கடவுளைக் காண்டற்கு அயர்த்து நரிவிருத்தம் ஆகுவர் .

-அப்பர்   தேவாரம், ஐந்தாம்  திருமுறை 

வேள்வியாகவும்,வேள்வியின் தலைவனாகவும், வேள்வியை காப்பவனாகவும்,வேள்வியை முழுமையடையச்செய்ப்பவனாகவும், வேள்வியின் ஹவிர்பாகமாகவும்,வேள்வியின் ஹவிர்பாகத்திற்கு உரியவனாகவும்,வேள்வியின் ஹவிர்பாகத்தை தேவர்களுக்கு வழங்குபவரும்,வேள்வியின் பயனாக விளங்குபவரும்,வேள்வியின் பயனை வழங்குபவரும்,கர்ம காண்டத்தின் முடிவும்   பரமசிவன் தான் என்பதே வேதங்களின் முடிப்பு.

 

Most Reading

Archives

Total Pageviews