தூங்கும் போதும் தூக்கம் இல்லாத போதும் எப்போ தும் மனம் உருகி ஐந்தெழுத்து ஓதலாம் என்பதை துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் என்று சம்பந்தர் கூறுகிறார். தன்னை அறியாமலேயே நாக்கு பழக்கத்தினால் எப்போதும் நமச்சிவாய ஐந்தெழுத்து ஓதும் என்பதை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றார் சுந்தரர். தீட்சை என்பது முறைப்படி ஆகம விதிப்படி தினமும் நியமத்துடன் சிவ பூசை செய்வதற்கு அளிக்கப்படும் செயல். சரியை ---- கோயில் வழிபாடு, கோயிலைப் பெருக்கி மெழுகித் தூய்மை செய்தல் , பூசைப் பொருட்களை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோயில் திருப்பணிகள், கிரியை ---- இல்லம் ஆற்றங்கரை மர நிழல் ஆகிய இடத்தில் திருவுருவத்தை அமைத்து நீராட்டி மலர் தூவி தூப தீபம் காட்டி வழிபடுதல், யோகம் --- தவம்,இயமம் தியானம் முதலிய எட்டு வகையாய் இறைநினைவில் திளைத்தல், ஞானம் ----நூல்களைக் கற்று கேட்டு சிந்தித்து தெளிந்து உணர்ந்து சதா சர்வ காலமும மானசீகமாக வழிபாடு செய்தல் அகிய நான்கு வித வழிபாட்டு நெறிகள் உள்ளன. சமய தீட்சை விசேச தீட்சை நிர்வாண தீட்சை அபிசேக தீட்சை என்று தீட்சை நான்கு வகைப்படும். எல்லோருக்கும் வழங்கப்படுவது சமய தீட்சை. பக்குவம் பெற்றவர்களுக்கு அளிக்கப்படுவது விசேச. தீட்சை. கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படுவது நிர்வாண. தீட்சை. சிவாச்சாரியர்களுக்கு வழங்கப்படுவது அபிசேக தீட்சை. ஆச்சாரிய அபிசேகம் செய்யப்படாவிட்டால் பிற தெய்வத் திருவுருவங்களைத் தீண்டி வழிபடுபவர் கூட லிங்கப் பரம்பொருளைத் தீண்ட முடியாது. தனி மனிதர்களுக்குப் பூசை முறை தெரிந்து இருந்தால் குரு இல்லாமலும் தீட்சை இல்லாமலும் பூசை செய்யலாம். சண்டீசர் கண்ணப்பர் மற்றும் சிலந்தி மயில் நண்டு யானை ஈ எறும்பு முதலிய எல்லா சீவ ராசிகளும் சிவ பூசை செய்து முக்தி பெற்றுள்ளன.