Pages

Friday, 14 June 2019

பஞ்சாங்கம் என்றால் என்ன


என்னுடைய ஜன்ம நட்சத்திரம் மூலம் ஒருவருக்கு ரேவதியாக இருக்கலாம், இன்னும் ஒருவருக்கு கார்த்திகையாக இருக்கலாம். இப்படியாக ஒவ்வொரு நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் ஒன்று ஜன்ம நட்சத்திரமாக இருக்கும். நம் ஜன்ம நட்சத்திரத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது? பஞ்சாங்கத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

பஞ்சாங்கம் என்றால் என்ன ? பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்களைக் கொண்டது. அவையாவன: 

1. திதி 
2.வாரம் 
3. நட்சத்திரம் 
4. யோகம் 
5.கரணம். 

இந்த ஐந்தையும் நாம் பஞ்சாங்கதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் நட்சத்திரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அதற்குப் பிறகு நாம் திதி, வாரம், யோகம், கரணம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

நாம் எல்லா கிரகங்களும் வான மண்டலத்தைச் சுற்றி வருகின்றன என்று கூறி இருந்தோம். வான மண்டலத்தில் 27 நட்சத்திரங்களும் பரவி இருக்கின்றன. அவைகளின் மேல் தான் 9 கிரகங்களும் வலம் வருகின்றன. சென்ற பாடத்தில் வான மண்டலத்தை 12 பகுதியாகப் போட்டு காட்டி இருந்தோம். அந்தப் 12 பகுதியையும் நாம் ராசி என்றோ அல்லது வீடு என்றோ இனிக் கூறுவோம்.

ராசியில் 1ம் எண் போடப்பட்ட வீடு அல்லது ராசியின் பெயர் மேஷம்.

1 - மேஷம் 
2 - ரிஷபம் 
3 - மிதுனம்
4 - கடகம்
5 - சிம்மம் 
6 - கன்னி 
7 - துலாம்
8 - விருச்சிகம்
9 - தனுசு
10 - மகரம்
11 - கும்பம் 
12 - மீனம்.



இப்போது 12 ராசிகளின் பெயர்களைத் தெரிந்து கொண்டீர்கள். இப்போது 12 ராசியிலும் நாம் 27 நட்சத்திரத்தையும் அடைக்கப்போகிறோம்.
ஒரு நட்சத்திரத்தை 4 பங்காக ஆக்குங்கள். ஒவ்வொரு பங்கிற்கும் பாதம் என்று பெயர். ஆக 4 பாதங்கள் கொண்டது ஒரு நட்சத்திரம். இப்போது ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் என்று தெரிந்து கொண்டீர்கள். அப்படியானால் 27 ம் நட்சத்திரத்திற்கு 27 x 4 = 108 பாதங்கள். நாம் இப்போது மேலே கூறிய 12 ராசிகளில் வரிசைக் கிரமமாக அடைக்கப் போகிறோம். ஒரு ராசிக்கு 9 வீதம் 12 ராசிக்கும் 108 பாதங்களை அடைக்கப் போகிறோம். முதல் ராசி அல்லது வீடான மேஷத்திற்கு அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம். ஆக மொத்தம் 9 பாதங்கள். அதைப் போல் ஒவ்வொரு ராசிக்கு எந்தெந்த நட்சத்திரங்கள் அடங்கி இருக்கின்றன எனப் பார்ப்போம்.

மேஷம் - அஸ்வனி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1ம் பாதம்.

ரிஷபம் - கார்த்திகை 2,3,4, பாதங்கள், ரோகிணி 4 பாதங்கள் மிருகசீரிஷம் 1,2 பாதங்கள்.

மிதுனம் - மிருகசீரிஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்.

கடகம் - புனர்ப்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் 

சிம்மம் - மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்

கன்னி - உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள்

துலாம் - சித்திரை 2, 3 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3, பாதங்கள் 

விருச்சிகம் - விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

தனுசு - மூலம், பூராடம், உத்திராட்டம் 1-ம் பாதம்

மகரம் - உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்

கும்பம் - அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டதி 1,2,3 பாதங்கள் 

மீனம் - பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

ஆக ஒவ்வொரு ராசிக்கும் 9 பாதங்கள் வீதம் 27 நட்சத்திரங்களையும் 12 ராசியில் அடக்கி விட்டோம். எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த ராசியில் வருகின்றன என்பதை நீங்கள் மனப்பாடமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இது மிக அவசியம். அடிப்படையும் கூட.

இந்த 12 ராசிகளிலும் 9 கிரகங்களும் வலம் வருகிறது. இப்போது வைகாசி மாதம். சூரியன் ரிஷபத்தில் வலம் வருவார். ரிஷபத்தில் இருக்கும் போது கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி அல்லது மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் மேல் வலம் வருவார். நாம் சூரியன் ஒரு ராசியில் 30 நாட்களில் கடப்பார் என்று கூறி இருந்தோம். அப்படியானால் ஒரு நட்சத்திர பாதத்தை கடக்க 3 1/3 நாட்கள் ஆகும். இதை இன்னும் விளக்கமாக எழுதுகிறோம். வைகாசி 1-ம் தேதி கார்த்திகை 2-ம் பாதத்தில் (ரிஷபத்தில் ) சூரியன் இருக்கிறார். 2-ம் பாதத்தைக் கடக்க அவருக்கு 3 1/3 நாட்கள் ஆகும். அதற்குப்பின் கார்த்திகை 3-ம் பாதத்தைக் கடக்க இன்னும் ஒரு 3 1/3 நாட்கள் ஆகும்.கார்த்திகை 3 பாதங்களையும் கடக்க அவருக்குத் தேவையானது 'TU நாட்கள் ஆகும். 11-ம் நாள் அவர் ரோகிணி முதல் பாதத்தில் சஞ்சாரம் செய்வார். இவ்வாறாக அவர் ஒவ்வொரு நட்சத்திரத்தின் மேலும் சஞ்சாரம் செய்து 30 நாட்களில் ஒரு ராசியைக் கடக்கிறார். எந்தெந்தத் தேதியில் எந்தெந்த நட்சத்திரத்தில் எந்தெந்த ராசியில் சஞ்சாரம் செய்கிறார் என்ற விபரம் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுக்கப் பட்டு இருக்கிறது. சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்யும். இப்போது எல்லா கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், ஒரு நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்யும் எனத் தெரிந்து கொண்டீர்கள்.

இந்த 9 கிரஹங்களில் சந்திரனுக்கு அதிக முக்கியத்துவம் ஜோதிட உலகம் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தினத்தன்று எந்த நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்கிறாரோ அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும். உதாரணமாக வைகாசி மாதம் 1-ம் தேதியை எடுத்துக் கொள்வோம். அன்றைக்கு அவிட்டம் நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும். அன்றைக்கு ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் ஜென்ம நட்சத்திரம் அவிட்டம் ஆகும். என் நட்சத்திரம் மூலம் என்று எழுதி இருந்தேன். அதாவது நான் ஜெனித்த அன்று மூல நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்து கொண்டு இருந்தார். ஆகவே என் ஜென்ம நட்சத்திரம் மூலம் ஆகும். மூலம் எந்த ராசியில் இருக்கிறது ? தனுர் ராசியில் இருக்கிறது. ஆகவே என் ஜென்ம ராசி தனுர் ராசி ஆகும்.

இதே போன்று ஒவ்வொரு நாளும் எந்த நட்சத்திரத்தின் மேல் சந்திரன் செல்கிறாரோ அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திரம் எந்த ராசியில் இருக்கிறதோ அதுவே ஜென்ம ராசி ஆகும். இப்போது ஒரு சிக்கல் வருகிறது. மே 1-ம் தேதி அவிட்டம் நட்சத்திரம் என்று கூறி இருந்தோம். அவிட்ட நட்சத்திரம் மகரத்திலும், கும்பத்திலும் இருக்கிறது. அப்படியானால் என்ன ராசி ? மகரமா அல்லது கும்பமா ? பதில் மிக எளிது. அவிட்டம் முதல் பாதம், அல்லது இரண்டாம் பாதத்தில் சஞ்சாரம் செய்தால் மகர ராசி ஆகும். 3-ம் பாதம் அல்லது 4-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்தால் கும்ப ராசி ஆகும். சந்திரன் எந்தப் பாதத்தில் சஞ்சாரம் செய்கிறார் என்பதைக் கண்டு பிடிக்கும் முறையை நாம் பின்னால் எழுதுகிறோம். இப்போதைக்கு இவ்வளவு தெரிந்து கொள்ளுங்கள். போதும். ஒவ்வொரு நாளும் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் எந்த ராசியில் சஞ்சாரம் எவ்வளவு செய்வார் என்ற விபரம் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும். அதைப்பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் மட்டும் அல்ல, எல்லாக்கிரஹங்களும் எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கின்றன என்ற விபரம் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும். பஞ்சாங்கத்தை எப்படிப் பார்ப்பது என்று விளக்கும்போது உங்களுக்கு அதைச் சொல்லித் தருகிறோம்.

சரி! எந்தப் பஞ்சாங்கத்தைப் பார்ப்பது? கடையிலே சென்றால் பலவிதமான பஞ்சாங்கங்கள் காணப்படுகின்றன. எதை வாங்குவது ? இது முக்கியமான கேள்வி. இதற்கு மிக விளக்கமாக பதில் எழுத வேண்டும்.

திருகணிதமா அல்லது வாக்கியமா ?

கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய காலத்திற்குச் செல்வோம். அக்காலம் தான் "சித்தாந்த ஜோதிஷ காலம்" என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஒட்டி பஞ்சாங்கங்கள் கணிக்கப் பட்டன. கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது "வாக்கிய முறை" எனப்பட்டது. இதுதான் முதன் முதலாக வந்த பஞ்சாங்கக் கணித முறை. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கியப் பஞ்சங்கம்" எனப்பட்டது.

வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டனர் அதற்குப் பிறகு வந்த பெரியவர்கள். அவைகளை திருத்திப் புதிய முறையைக் கண்டனர். அதற்குப் பெயர் "திருகணித முறை" எனப்படும். இந்த திருகணித முறையை ஒட்டிப் பஞ்சாங்கங்கள் கணிக்கப் படுகின்றன. இந்தப் பஞ்சாங்கங்களுக்குப் பெயர் "திருகணிதம்" பஞ்சாங்கம் எனப் படும். அப்படியானால் நாம் எந்தப் பஞ்சாங்கத்தைப் பயன் படுத்த வேண்டும்? இரண்டு வகையான பஞ்சாங்கங்கள் நம்மிடம் இருக்கின்றதே!

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களைப் பார்ப்பதற்கு "டெலஸ் கோப்புகள்" வந்து விட்டன. கிரகங்களின் வேகம், பாதையைக் கண்டறியும் அளவிற்குக் கணிதம் வளர்ந்து விட்டது. தற்போதுள்ள கணித முறையும், திருகணித முறையும் எந்த வித மாறுதல் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆக திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளனர் இக்காலத்தில். ஆகவே திருகணித முறை தான் சிறந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ . ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமை வாய்ந்தது என்று பழமையைக் கொண்டாடுகிறார்கள். நாம் அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுவோம்.

காளிதாஸனுடைய "உத்திர காலாம்ருதமும்" திருகணித முறைதான் சரியான முறை எனக் கூறுகிறது. மந்த்ரேஸ்வருடைய "பல தீபிகையும்" இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. (உத்திர காலம்ருதம், பலதீபிகை எல்லாம் ஜோதிட நூல்கள் )

சரி! திரு கணிதப் பஞ்சாங்கங்கள் எவை?

1.ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியாள் மடத்துப் பஞ்சாங்கம். 
2. ஸ்ரீ காஞ்சி ஆச்சாரியாள் பாரத் கணிதப் பஞ்சாங்கம் 
3. ஆனந்த போதினி திருகணிதப் பஞ்சாங்கம்

இவைகள் எல்லாம் திருகணிதப் பஞ்சாங்கம். இவைகள் மூலம் ஜாதகம் கணித்தால் ஜாதகம் சரியாக வரும். தவறு வர வாய்ப்பில்லை. ஆகவே நீங்களும் திருகணிதம் தான் உபயோகிக்க வேண்டும் என்று கூறுவோம்.

இப்போது கடிகாரங்கள் இருக்கின்றன. அவை என்ன மணி, எத்தனை நிமிஷங்கள் எத்தனை வினாடிகள் என்று காட்டுகின்றன. இது நமக்கு வெள்ளைக்காரர்கள் சொல்லிக் கொடுத்தமுறை. ஆனால் நமது பண்டைய முறை அப்படி அல்ல. அவர்கள் கணக்கு எல்லாம் நாழிகை, வினாழிகையில் வரும். அந்தக் கணக்கை நாம் கீழே கொடுத்துள்ளோம்.

60 வினாழிகை - 1 நாழிகை 
60 நாழிகை - 1 நாள் 
2 1/2 நாழிகை - 1 மணி 
2 1/2 வினாழிகை - 1 நிமிஷம்

இந்தக் கணக்கு மனப்பாடமாகத தெரிந்து இருக்க வேண்டும். இது இல்லாமல் நாம் எந்தக் கணக்கும் போட முடியாது.

அடுத்தது நாள் என்றால் என்ன? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரவு 12.01க்கு மறுநாள் பிறந்து விடுகிறது. இது நமக்கு ஆங்கிலேயர் சொல்லிக்கொடுத்த முறை. இரவு 12.01 மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள். நமது பண்டைய முறை அப்படி அல்ல. இன்று சூரியோதயம் முதல் மறு நாள் சூரியோதயம் முடிய ஒரு நாள். உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் எனக் கொள்ளுங்கள். நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் எனவும் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் என்ப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறுசூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.

சூரிய உதயம் எத்தனை மணிக்கு ஆகிறது என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது? யாரைக் கேட்டால் தெரியும்? யாரையும் கேட்க்க வேண்டாம். பஞ்சாங்கத்தைப் பார்த்தால் தெரியும். சூரியன் எத்தனை மணிக்கு உதயம் ஆகிறது? எத்தனை மணிக்கு அஸ்தமனம் ஆகிறது ? என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள். வரும் இதழ்களில் பஞ்சாங்கம் எப்படிப் பார்ப்பது? என்று சொல்லிக்கொடுக்கிறோம். நாம் திருகணிதப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகித்துப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகின்றோம். இருப்பினும் நாம் வாசகர்களின் உபயோகத்திற்காக வாக்கியப் பஞ்சாங்கத்தையும் உபயோகிக்கிறோம்.

எல்லோரும் பஞ்சாங்கத்தைத் தேடி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.