Pages

Saturday, 14 October 2017

ஓதிமலை முருகன்

ஓதிமலைமுருகன்.

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது  ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது  .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து  முகங்களும்  , எட்டு  கரங்களும்  கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800  செங்குத்தான படிகளை  கொண்டது, மலையேற  சற்று சிரமமாகத்தான் இருக்கும்..  கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.

  🌼 புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..

🌼சுவாமிமலையில்  சிவனுக்கு பிரணவத்தின்  பொருளை  உணர்த்திய   முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை  உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.

🌼பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர்  ஒதிமலையில் முதலில்  முருகபெருமானை தரிசித்தார் பின்பு தான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில்  பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது .
ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை   செய்யப்பட்டதாகவும்  சொல்லப்படுகிறது ...

*போகர் தவம் செய்த பூதிக்காடு:*

🌼இம்மலையின் உச்சியில்  ஈசான திக்கிலிருந்து  பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு  பகுதி மட்டும் வெண்மை  நிறத்தில் காணப்படும்.. இது  பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர்  முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம்.
இங்கு மண்ணே  விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும்  "விபூதிக்காடு  - தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று  அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில்  அமைத்து அதில் கல்பீடம்  வைக்கப்பட்டு உள்ளது ..

🍁இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து   உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர்.  இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.

🍁 பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட   மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுள்ளது  .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்
சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே  அழைக்கப்
படுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..

*ஓதிமலை குறித்த புராணச் செய்தி :*

🍁படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல்  நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே  படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

🍁 படைக்கும்  கடவுளான  பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து  உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”
எனப்பட்டது.

🍁முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய
ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.

*ஓதி மலை அமைவிடம் :*

      சத்தியமங்கலத்தில் இருந்து  புளியம்பட்டி வரவேண்டும்.
புளியம்பட்டி-ல இருந்து 1௦ கீமீ தான்…ஆனா புளியம்பட்டி-ல இருந்து ஒதிமலை போக பஸ் வசதி  குறைவு..

🔴1. ஈரோட்டிலிருந்து - ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும் ..

🔴2. கோவையிலிருந்து -கோவை >  அன்னூர் > ஒதிமலை வரவேண்டும் .

🔴3.  மதுரையில் இருந்து மதுரை  -  பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி  > புளியம்பட்டி > ஓதி மலை வரவேண்டும்..

ஒருமுறை  சென்றுவாருங்கள் சித்தர்களின் அருளும் , முருகபெருமானின் பரிபூரண  கடாட்சியமும் ,அருமையான  அனுபவங்களையும்  பெறுவீர்கள் ..

*முருகபெருமான் அருள்புரியும்  திருத்தலங்கள் :*

1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன்  --  அவினாசி அருகில் உள்ள திருமுருகன்பூண்டியிலும்,

2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன்  --  பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,

3. நான்கு முகம் எட்டு கரங்களுடன்   திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்

4. மூன்று முகம் ஆறு கரங்களுடன்  --  கோபி, காசிபாளையம் குமரன்கரட்டிலும்,

5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன்  --  சென்னிமலையிலும்,

6. ஒரு முகம்  தண்டாபுதபாணியாக  --  பழனியிலும், மற்றும் அனேக
இடங்களில்  முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.

          1. ஆறுமுகம் கொண்ட கோலம் -திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலமாகும். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக்  கொண்ட தலம் எனக் கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்திதோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால்பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

2. ஐந்து முகம்கொண்ட திருக்கோலம் -போகருக்கு வழிகாட்டிய ஓதியப்பர் - ஓதிமலை முருகன்.

3. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான்-  திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும்
பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப்
பெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக்
கடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர்
நான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

  4.  மூன்று முகத்திருக்கோலம் -  மூன்று முகமுருகனாக ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800 ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால் முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கிழக்கு பார்த்த  முகமாக நின்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார்.எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை பீடத்தில் அமைத்திருப்பதை காணலாம். ஆனால் இத்திருக்கோவில்முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன் சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.

   5..இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில்
செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே
இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும்அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகலகிரக பீடைகளும் உடனே விலகும்.

6.ஒரு முகங்கொண்ட முருகன் பழனி முதலான அனேக இடங்களில் தரிசிக்கலாம் .

          ,திருச்சிற்றம்பலம்.

      அடியாா்கள் கூட்டம் பெருகுக!
ஆசை தீர கொடுப்பாா்-------
------ அலங்கல் விடைமேல் வருவாா்.
அருளாளா !! அண்டசராசரனே !!!
          திருச்சிற்றம்பலம்.
ஓதிமலை முருகன்

காளையார்கோயில்

ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் கோயில். இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மருது சகோதரர்களுக்கு எண்ணம் ஏற்பட்டது.

தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த குப்பமுத்து ஆசாரி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் சிற்பி.

புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது.

இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து "தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும். எனது தலைமையில் தேர் செய்யப்படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன்' என்று கூறி விட்டார்.

தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது. தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது. தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு தைப்பூசத் திருநாளில் முதல் முதலாக தேர் ஓடத் தொடங்கியது.

தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்து விட்டு வந்து விட்டார். இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.

ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது தேர் அசைய மறுத்து விட்டது. அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது. தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார். இதன்பின் அவரை அழைத்தனர்.

பெரிய மருது "தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன்' என்றார். அதற்கு சிற்பி "உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள் அவற்றை நான் அணிந்து கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும்' என்றார்.

சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு "சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார். தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்' என்று கூறிக் கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.

மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணிந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்து விட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க தேர் புறப்பட்டது.

பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர். தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.

"பேராசைக்காரன் இறந்து விட்டான்' என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது. அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.

"மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்.

ஏராளமான கோயில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும். வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.

எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மருது மன்னர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க' என்று எழுதப்பட்டிருந்தது.

சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார்கோயிலுக்கு வெளியே, கோயிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.

👉 அரசனை காப்பது குடியானவன் கடமையென்று உயிர் தியாகம் செய்த குப்பமுத்து ஆசாரி 👈

👉 சாதரண பிரஜைக்காக  சொன்ன சொல்லை காத்து காளையார் கோவில் தேருக்காக பதவியை துறந்து மாமன்னர் மருது பாண்டியர்கள் 👈..

இப்படி பட்ட தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்..

வரலாற்றை மறந்தும் விடாதீர்கள் மறைத்தும் விடாதீர்கள் என்றும்...

நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற பூமிக்கடியில் கால்வாய்

நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற பூமிக்கடியில் கால்வாய்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1200 மீட்ட தூரத்திற்கு அப்பால் நீரிணை கொண்டு சென்றுள்ளனர் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கடியில் கால்வாய் அமைப்பு: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து நிலவறை கால்வாய் வழியாக மழைக் காலங்களில் வரும் உபரிநீரினை கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தை சென்றடையும் வண்ணம் நிலவறை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயினை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தொல்லியல் ஆய்வாளர்கள் ஜே.ஆர்.சிவராமகிருஷ்ணன், பேராசிரியர் பி.கலைச்செல்வன் மற்றும் ஆய்வு மாணவர்கள் சுசேந்திரன், ராஜராஜன், பிரபாகரன் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்தது. ஆய்வு குறித்து ஆய்வாளர்கள் தெரிவித்தது: இந்த கால்வாய் மூலம் பள்ளமான பகுதியான தெற்கிலிருந்து, மேடான பகுதியான வடக்கு நோக்கி நீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பள்ளமான பகுதியிலிருந்து, மேடான பகுதி நோக்கி நீர் கொண்டு செல்லும் கால்வாய் உலகத்திலேயே வேறு எங்கும் இதுபோன்று அமைக்கப்படவில்லை.

கால்வாய் ஒரு இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாகவும் என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். சிறந்த நீர் மேலாண்மை: குறிப்பாக பராந்தகசோழன் கீழணையிலிருந்து மேடான பகுதியான வீராணம்ஏரிக்கு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி வடவாறு வழியாக நீர்கொண்டு செல்ல வாய்க்கால் அமைத்துள்ளான். பாம்பு போல வாய்க்கால் இருந்தால், தண்ணீ்ர் பனை ஏறும் என்ற பழமொழி இதற்கு பொருந்தும். நீரை எளிதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தவும், சேமிக்கவும் சிறந்த நீர்பாசன மேலாண்மை நிர்வாகிகளாக சோழர்கள் இருந்துள்ளனர் என்பதை இத்தொழில்நுட்பம் காட்டுகிறது.

நிலவறை கால்வாய் 1250 மீட்டர் நீளம் கொண்டது. நிலமடத்திலிருந்து 119 செ.மீ ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயின் உள்அளவு உயரம் 77 செ.மீ, அகலம் 63 செ.மீ ஆகும். இக்கட்டமைப்புக்கு நன்கு அரைக்கப்பட்ட களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்ட சுட்ட செங்கற்களை பயன்படுத்தி உள்ளனர். இவைகள் 24X15X5 செ.மீ நீள, அகலங்களை கொண்டதாகும். 1:3:6 என்ற சரியான அளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் இந்த கட்டுமானத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக செங்கற்களை இணைக்க சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 அடி அகலம், 5 அடி நீளம் பெரிய கருங்கல் பலகைகளை கொண்டு கால்வாயின் மேல்பகுதி மூடப்பட்டுள்ளது.

பிற்கால சோழர் காலம்: இந்த கால்வாயின் கட்டுமான அமைப்பும், அதன் தொழில்நுட்பத்தையும் பார்க்கும் போது பிற்கால சோழர்கள் காலத்தில் அதாவது கிபி 10-13 நூற்றாண்டில் இக்கால்வாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற கால்வாய் அமைக்கும் திட்டம் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மொஹஞ்சாரா, ஹரப்பா உள்ளிட்ட பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீக மக்கள் பயன்படுத்தி உள்ளனர். அதே தொழில்நுட்பத்தை தமிழர்களும் பயன்படுத்தியுள்ளதனால், சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் நமக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கு இக்கால்வாய் சான்றாக அமைந்துள்ளது.

Sunday, 1 October 2017

சனி பகவான்

சனி பகவான் யார் எல்லாம் மற்றவர்களுக்கு துன்பங்கள் செய்கிறார்களே அவர்களை தண்டிக்காமல் விடுவதில்லை.

1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.

2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.

3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.

4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.

5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.

6. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.

7. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.

8. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.

9. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.

10. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.

11. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.

12. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.

13. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.
14. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.

15. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.

16. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும்.

17. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சண்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.

18. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.

19. தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.