சன்னியாச தர்மம்....
சன்னியாசத்தை நான்கு வகையாகப் பிரிக்கின்றனர். சன்னியாச உபநிஷத்தில் ஒருவன் சொத்தையெல்லாம் தானம் செய்து விட்டு பூணூலை எடுத்துவிட்டு மொட்டை அடித்துக் கொண்டு வடக்கு நோக்கி எல்லாவற்றையும் துறந்து செல்ல வேண்டும் என்றும்; கிராமத்தில் ஓரிரவும் நகரத்தில் ஐந்து இரவுக்கு மேலும் தங்கக் கூடாது என்றும்; மழைக்காலத்தில் கிராமமோ, நகரமோ எங்கிருந்தாலும் நான்கு மாதம் வரை தங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதமான ஆடைகளை அணியாமல், பழைய வஸ்திரங்களை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவன் தினமும் ஒருவேளை மட்டும் பதினைந்து கவளத்திற்கு மேற்படாமல், ஏழு வீடுகளுக்குள் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிச்சை எடுக்கும் வீடுகளில் உரல், அம்மி சத்தம் நின்றபிறகு, மதியத்திற்கு மேல் சென்று, "பவதி' என்று நிதானமாக உச்சரிக்க வேண்டும். இல்லறத்தான் வீட்டிற்குள் செல்லக்கூடாது. யாராவது புகழ்ந்து பிச்சையிட்டால் அதை உண்ணக்கூடாது.
திருமணமாகாதவர்க்கு ஒரு பலாச தண்டம் வைத்துக் கொள்வதுபோல், துறவி மூன்று மூங்கில் குச்சிகளைச் சேர்த்துக் கட்டி தண்டமாக கையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரே வஸ்திரத்தை அணிய வேண்டும். நடந்தே செல்ல வேண்டும். தேன் போன்றவற்றையும் மாமிச உணவுகளையும் உண்ணக் கூடாது.
பிச்சை வாங்கும்போது தரையைப் பார்த்த வாறு இருக்க வேண்டும். துறவியின் பார்வை ஆறு அடிக்குமேல் செல்லக்கூடாது. ஆனால் மோட்சத்தை விரும்பும் துறவியைவிட அவனுக்குப் பிச்சையிடும் குடும்பஸ்தனே உயர்ந்தவன். அவனுக்கே மோட்சம் உண்மையில் எளிதில் கிடைக்கும்.
சன்னியாசிக்கு எவ்விதமான சித்திகளும் கிடையாது. நாம் சாமியார் என்று ஒரே வார்த்தையில் எல்லாரையும் அழைக்கிறோம். சன்னியாசிகள் மற்றவர்களை ஆசீர்வாதம் செய்வதுகூட கூடாது. அதாவது நிஜ சன்னியாசி, "நிர்நமஸ்காரம் நிராசிஷம்' என்று அவரைப் பற்றி சொல்லியுள்ளது. அதனால் யாருக்கும் "நீ நன்றாக இரு' என்று ஆசீர்வாதம் செய்ய வேண்டிய அவசியமும் துறவிக்குச் (சன்னியாசிக்கு) கிடையாது.
இவ்வாறு சொல்லி வரும்போது மடங்களைப் பற்றி உங்களுக்குக் கேள்வி வரும். பாரம்பரிய மடாதிபதிகள் இந்து தர்மத்தைக் காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பில் இருக்கின்றனர். மத துவேஷத்தை ஒழித்து நாராயணனே பரம்பொருள் என்று உலகுக்கு உணர்த்திய எம்பெருமான் ராமாநுஜரும், எல்லா மதங்களையும் ஒருங் கிணைத்து ஷண்மத ஸ்தாபனம் செய்து கடவுள் நம் உள்ளே இருக்கிறார் என்ற அத்வைதத்தை உலகுக்குப் பறைசாற்றிய ஆதிசங்கரரும், தமிழ் என்பது இறைவனுக்கு நெருக்கமான மொழி என்று நிரூபித்த ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றவர்களும் ஏற்படுத்திய மடங்களும் இந்த சன்னியாச தர்மத்தில் இருந்து வேறுபடுகிறது.
இவர்களை நமஸ்கரிக்கும்போதுகூட உள்ளே இருக்கும் நாராயண பரம்பொருளை முன்னிட்டு அதிகபட்சம், "நாராயணா' என்று மட்டும் சொல்வார்கள். தர்மம் செழிக்க நினைத்து வணங்குபவரை அதிகபட்சமாக "க்ஷேமமாக இரு' என்று மட்டும் சொல்வார்கள். இதுகூட தர்மத்தின் பொருட்டு சொல்வதாகும். வைணவ சந்நியாசிகளுக்கு தலையில் சிகையும் (குடுமியும்) பூணூலும் உண்டு.
இவர்கள் ஆசார்ய புருஷர்களாகவும், (குரு) தர்மகர்த்தாக்களாகவும் (மொழி மற்றும் தத்துவங்கள்), துறவிகளாகவும் மூன்றுவித தோற்றத்தில் இருக்கின்றனர். ஆகையால் இவர்கள் முன்பு சொன்னவர்கள் கூறிய தத்துவங்களைக் காப்பாற்றவும், அவற்றைப் பரப்பவும் கடமைப் பட்டவர்களாக ஆகின்றனர்.
ஏற்கெனவே மஹரிஷியின் வாக்குப்படி பொன், வெள்ளி, தனம் கையாள வேண்டி இருந்தால், தனது என்ற சிந்தனை இல்லாமல் சன்னியாசி தர்மகர்த்தாவாகத் திகழலாம் என்ற வாக்கியபடி இவர்கள் மடத்திற்காகத் தனியாக அறக் கட்டளைகளை ஏற்படுத்தி நிர்வகிக்கின்றனர். நிர்வாகக் காரணத்திற்காக ஒரே இடத்தில் நீண்ட காலமாக வசிக்கின்றனர்.
ஆகையால் இவர்களை வெறும் சன்னியாசி களாக மட்டும் பார்க்கக்கூடாது. புதிய புதிய மடங்களோ, புதிய அவதார புருஷர்களோ நமக்கு இனி தேவையில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் ரமண மகரிஷி வரை எத்தனையோ மகான்கள் தத்துவங்களை எளிதில் சொல்லிவிட்டுச் சென்று விட்டனர். ...
நன்றி சுவாமி ஒம்கார்சுவாமிகள்....