Pages

Sunday, 19 February 2017

அப்பர் தேவாரம்



தில்லை குறுந்தொகை

குறிப்பு: தில்லையின் ஆடு உயர் கொடிசூழ் அணிவீதி மருங்கு சார்ந்து கனகப்பொதி எதிர் கண்ணுற்ற அப்பர் பெருமான், கூடிய பணிகள் செய்து கும்பிட்டு இருந்த காலத்தே அருட்பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும் திருக்குறுந்தொகை பாடி திருவுழவாரம் கொண்டு பெருகு பேரின்பம் உற்றனர்

மண்ணிடை பிறந்தார் பயன் மதி சூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பதற்கு ஏற்ப மாகேசுர பூசையின் போது மல்குதிரு தொண்டர் குழாம் அடியவர்களுக்கு அமுது செய்விக்கும் போது பாடிப்பரவும் பைந்தமிழ் மாலை இத்திருப்பதிகம், அன்னம் பாலிக்கும் என்ற தொடக்கத்தினதாம்

பாடல்

அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்குமாறு கண்டின்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே.

அரும்பற்றப் பட ஆய்மலர் கொண்டு நீர்
சுரும்பற்றப் படத்தூவித் தொழுமினோ
கரும்பற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற்றப் புலியூர் எம்பிரானையே.

பொருள்

பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும் . இத்தகைய திருச்சிற்றம்பலத்தை , மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு , பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் கொடுக்குமோ முதல்வன் ?

அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி , கரும்பாகிய வில்லை ஏந்திய காமனை எரித்தவனாகிய பெரும்பற்றப் புலியூர் எம்பிரானை நீர் தொழுமின் .



தமிழகத்தின் புகழ்பெற்ற ஓதுவார்கள் ஒரே குரலில் பாடும் அழகை சொல்லால் வடித்து சொல்லவும் கூடுமோ?!! கேட்டின்புறுங்கள்

தீபன்ராஜ் வாழ்க்கை
📱9585756797